தனியார் நடத்தும் போட்டிகளுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் நடத்தும் போட்டிகளுக்கு போலீசாரின் அனுமதி தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள லெனா விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி கோரி பிரான்சிஸ் சூசை என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகாஜூன், கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதற்கிடையே, தனிநீதிபதி வழங்கிய இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி அதே பகுதியை சேர்ந்த மயில்வாகனம் என்பவர் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் அமைப்புகள் சார்பில் கிரிக்கெட், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு போலீசாரின் முன் அனுமதி தேவையில்லை. அவர்கள் நடத்தும் போட்டிகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு போலீசில் புகார் அளித்தால் மட்டும் போலீசார் தலையிடலாம் என்று உத்தரவிட்டனர்.






