12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வழிகாட்டுதல் முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற உயர்கல்வியில் சேராத, பதிவு செய்யாத மாணவ-மாணவிகள் மேற்கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யும் விதமாக "நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி "உயர்வுக்குப் படி" என்ற தலைப்பில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து தொடர்புடைய அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
இம்முகாமில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லுரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் கலந்துகொண்டு தங்கள் கல்லூரிகளில் உள்ள படிப்பு விவரங்கள் மற்றும் தற்போதைய காலியிடங்கள், அதற்கான கட்டண விவரங்கள் குறித்த அரங்கு அமைத்து துண்டு பிரசுரங்கள் வழங்குவதோடு, விருப்பம் உள்ள மாணவ-மாணவிகளை தங்கள் கல்லூரியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
சான்றிதழ்கள் பெற வசதி
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் சார்பில் மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முகாமை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி பேசியதாவது: இம்முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி, தங்கிப் பயில்வதற்கான விடுதி வசதிகள், இட ஒதுக்கீடு மற்றும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், வங்கிகள் வாயிலாக கல்விக்கடன் பெறுவதற்கான அணுகுமுறைகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள்; வழங்கப்படுகிறது.
மாணவ-மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக சாதிச்சான்று, வருமானச்சான்று, முதல்தலைமுறை பட்டதாரி சான்று போன்ற சான்றிதழ்களை இங்கேயே பெறுவதற்கு ஏதுவாக இ-சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
312 மாணவர்கள் பங்கேற்பு
2-வது கட்டமாக சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட 510 மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து 03.07.2023 அன்று விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.எனவே, தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அனைத்து மாணவ-மாணவிகளும் ஏதேனும் ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயில வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட சமூகநல அலுவலர் சுசீந்திரதேவி, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் 16 அரசு பள்ளிகளில் இருந்து 312 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.