ஆசிரியர் பணிக்கானபோட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி:கலெக்டர் தகவல்
ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டுக்கான ஆண்டுதிட்ட நிரலின்படி இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிப்பணியிடங்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிப்பணியிடங்கள் ஆகியவற்றிற்கான போட்டித் தேர்வு நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் நடக்கிறது.
சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி அளிப்பதோடு, ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.