நகை கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது


நகை கடைகளில் 2-வது நாளாக கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியை முன்னிட்டு 2-வது நாளாக நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அட்சய திருதியை முன்னிட்டு 2-வது நாளாக நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் மிகவும் விசேஷமான நாள் வளர்பிறையில் வரும் திருதியை திதி ஆகும். இந்த திருதியை நாளை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். இந்த திருதியை திதியில்தான் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து சோமுகாசுரன் என்ற குதிரை முகம் கொண்ட அசுரனை அழித்து வேதங்களை மீட்டெடுத்தார் என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. எனவே பெருமாளுக்கு மிகவும் உரிய இந்த அட்சய திருதியை நாளில் தொடங்கப்படும் எந்த காரியங்களும் வளர்பிறை போல் வளர்ந்து நிறைவான பலனை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அட்சய திருதியை நாளில் செய்யும் நல்ல காரியங்கள் வாழ்வில் தொடர்ந்து ஐஸ்வரியத்தை உண்டாக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு அட்சய திருதியை தொடங்கியது. பொதுவாக அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதை பொதுமக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

நகை வாங்க ஆர்வம்

அதன்படி நேற்று முன்தினம் அட்சய திருதியை தொடங்கியதால் குமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். முக்கியமாக நாகர்கோவில் மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சாலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

ஒவ்வொரு கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு பரிசு பொருட்கள் மற்றும் பரிசு கூப்பன்களை அறிவித்து நகை விற்பனையில் ஈடுபட்டனா். இதே போல் மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் நகை கடைகளில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

2-வது நாளாக...

இதற்கிடையே நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு தொடங்கிய அட்சய திருதியை நேற்று காலை 9.27 மணி வரை நீடித்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சுப முகூர்த்த தினம் என்பதாலும் 2-வது நாளாக நகை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

இதையொட்டி நகைக்கடைகள் அதிகாலை 5 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது. கடைக்காரர்கள் எதிர்பார்த்தது போலவே வாடிக்கையாளர்கள் நகை வாங்கிச் சென்றனர். நகைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story