மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சேவை மையம் அமைக்க கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்
தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக பென்னாகரம், அரூர் ஆகிய பகுதிகளில் ஓரிட சேவை மையம் அமைக்க கட்டிட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்து சேவைகள்
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரைட் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஓரிட சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையமானது பென்னாகரம், அரூரில் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையங்கள் அமைப்பதற்கு தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏற்றவாறு வசதிகளுடன் கூடிய கட்டிடத்தின் உள் அமைப்பு மொத்தம் 3,500 சதுர அடிக்கு மேல் இருக்க வேண்டும். கட்டிடம், பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள் மற்றும் இ சேவை மையங்களுக்கு அருகில் இருக்க வேண்டும்.
சுற்றுப்புற சுகாதாரம்
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சிறப்பு கழிப்பறைகள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய சாய்வு தள பாதையுடன் கட்டிடம் வெளிச்சம் மற்றும் சுற்றுப்புற தூய்மை சுகாதாரத்துடன் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசின் ஓரிட சேவை மையத்திற்கு 2 ஆண்டுகளுக்கு வாடகை குத்தகை அளித்திட விருப்பம் உள்ள கட்டிட உரிமையாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) க்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.