நெல்லை பல்கலைக்கழக வளர்ச்சிக்குரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்; செனட் கூட்டத்தில் தீர்மானம்


நெல்லை பல்கலைக்கழக வளர்ச்சிக்குரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்; செனட் கூட்டத்தில் தீர்மானம்
x

நெல்லை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று நேற்று நடந்த செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று நேற்று நடந்த செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செனட் கூட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 44-வது செனட் கூட்டம் பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மாணவர்களுக்கு உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, சைபர் பாதுகாப்பு, டேட்டா அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய 3 பாடங்கள் இந்த ஆண்டு புதிய இளநிலை படிப்புகளாக தொடங்கப்பட்டு உள்ளது.

கலைஞர் கருணாநிதி வளாகம்

பல்கலைக்கழகத்தின் சாந்திநகர் வளாகத்தில் 178 ஏக்கர் இடத்தில் 23 ஆயிரம் சதுர அடியில் புதிய வளாகம் அமைக்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் "கலைஞர் கருணாநிதி வளாகம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், 'பி.எச்.டி. மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவுடன் மதிப்பீடு விரைவாக செய்து முடிக்கப்பட வேண்டும். தேர்வு மறுமதிப்பீடு முடிவுகளை சிறப்பு தேர்வுகளுக்கு முன்பாக வெளியிட வேண்டும். தனியார் சுயநிதி கல்லூரிகளில் தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லை. பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவது இல்லை. எனவே உண்மை அறியும் குழு அமைத்து இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும்' என்றனர்.

ரூ.100 கோடி

நெல்லை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்ற தீர்மானம் குறித்து உறுப்பினர் நாகராஜன் பேசினார். அவர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் 13 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களுக்கு 2017-ம் ஆண்டு முதல் அரசு மானியம் தரவில்லை. 3 மாதங்களுக்கு ரூ.93 லட்சம் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகம் செயல்பட தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழகம் நிதி இல்லை என்றால் பேராசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறது. ஆகவே நெல்லை பல்கலைக்கழகம் சிறப்பு குழு அமைத்து நிதித்துறை செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் அதிகளவில் வர உள்ளன. அவை நிதி திரட்டுவதில் குறியாக உள்ளன. இதனால் மாணவர்கள் அதிகமான அளவில் பல்கலைக்கழகத்துக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் ஏழை மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து பேராசிரியர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

கூட்டத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story