வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு கடலூரில், 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு கடலூரில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ராணுவ நினைவு தூண் முன்பு நேற்று காலை வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோர் கலந்துகொண்டு பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அவா்கள் மறைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு துணி கட்டி இருந்தனா். இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, ஆயுதப்படை காவலர்கள் 63 குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.
உறுதிமொழி
பின்னர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த போலீசார் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீர தியாகம் வீண்போகாது என்று அனைத்து போலீசாரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக் குமார், பொன் கார்த்திக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கரிகால் பாரி சங்கர், சவுந்தரராஜன், மத்திய சிறை அலுவலர் செந்தில்குமார், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.