சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு வைகோ மலர் தூவி மரியாதை


சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு வைகோ மலர் தூவி மரியாதை
x

பாளையங்கோட்டையில் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில், பாளையங்கோட்டை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே சி.பா.ஆதித்தனார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். சிங்கப்பூரில் வழக்கறிஞராக இருந்து சிறப்பு பெற்று, லண்டனில் பத்திரிகை நிருபராக செயல்பட்டு சாதனை புரிந்தவர் அவர். 'தினத்தந்தி' பத்திரிகை மூலமாக புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார். 'காலையில் எழுந்தவுடன் தந்தி, அதன் பின்னர் தான் காபி' என்று சொல்லும் அளவுக்கு மாளிகைவாசி முதல் குடிசைவாசிகள் வரையிலும் அனைவரையும் பத்திரிகை வாசிக்க வைத்தவர் சி.பா.ஆதித்தனார். உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை அனைத்து செய்திகளையும் மனதில் பதியும் வண்ணம் தந்தவர். தமிழனுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என தொடங்கியவர் அவர். இந்தியாவிலேயே அதிக மக்கள் வாசிக்கும் பத்திரிகையாக 'தினத்தந்தி' திகழ்கிறது.

தந்தை பெரியாரை அழைத்து சென்று தஞ்சையில் தமிழ் மாநாட்டை நடத்தினார். இதன் காரணமாக தனிச்சிறையில் வாடினார். சபாநாயகராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கினார். மண் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம், உவரி ரைமண்ட், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், வைகோவின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், தென்காசி மாவட்ட பொருளாளர் வக்கீல் சுப்பையா, மாவட்ட துணை செயலாளர் மணப்படை மணி, செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, பகுதி செயலாளர்கள் கோல்டன் கான், பொன் வெங்கடேஷ், ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஆறுமுகப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story