கேரள மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்களால் விபத்து அபாயம்: போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
கேரள மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று திரும்ப வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பத்து முறி, கடைசிக்கடவு சக்கு பள்ளம், வண்டிப்பெரியார் புளியமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் அதிகாலையில் 5.30 மணிக்கு சென்று விட்டு மாலை 4.30 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். இவர்களின் வசதிக்காக இந்தப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தற்போது அய்யப்ப பக்தர்களின் வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கிறது. கேரள மாநிலத்திற்கு ஆட்களை ஏற்றி செல்லும் ஜீப்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு அதிக வேகத்தில் செல்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதேபோல் மாலையில் தோட்ட தொழிலாளர்களை திரும்ப அழைத்து வரும்போது ஜீப்கள் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு வருவதால் பள்ளி முடிந்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் கேரள மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் ஜீப்புகளை கண்காணிக்க வேண்டும். நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.