தேனி மாவட்ட சுற்றுலா தலங்களுக்குகடந்த ஆண்டில் 37½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை:அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கடந்த ஆண்டில் 37½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆய்வு செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வருகை தந்தார். பின்னர் அவர் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டலில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எல்.மூக்கையா, போடி லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள 10 சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் ஷஜீவனா அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோல் சின்னசுருளி அருவியில் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து மேம்படுத்த வேண்டும் என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் கோரிக்கை விடுத்தார். இதுதவிர தேனியில் உள்ள மீறுசமுத்திர கண்மாய் மற்றும் வைகை அணையில் படகு சவாரி தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் 37 லட்சத்து 63 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதனால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரூ.2 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைத்திருக்கலாம். அதேபோல இந்த ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் 26 லட்சம் பேர் தேனி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக தான் தற்போது சுற்றுலா தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் தங்குமிடம், தரமான ஓட்டல்கள், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படும் என்றார்.