போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?


போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படுமா?
x

சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

கடலூர்

தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று சிதம்பரம் ஆகும். இந்நகரம் ஆலயநகர் என்றும், நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது நாட்டியத்திற்கும், கட்டிடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம்.

பழமை வாய்ந்த கோவில்கள்

உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் இங்கு தான் அமைந்துள்ளது. மேலும் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த ஏராளமான கோவில்களும், பள்ளி-கல்லூரிகளும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அமைய பெற்றுள்ளது. நடராஜர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

படாதபாடுபடும் வாகன ஓட்டிகள்

இதனால் சிதம்பரம் நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள், நகரை கடந்து செல்வதற்குள் படாதபாடு படுகின்றனர்.

மேலும் சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மேல வீதி வழியாக தான் செல்கின்றன. அதுபோல் காரைக்கால் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் சிதம்பரம் அம்மாபேட்டை வழியாக சென்று வந்தன. ஆனால் தற்போது அம்மாபேட்டை அருகே நடந்த பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்தும், அதை போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.

மாணவர்கள் அவதி

இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் பச்சையப்பன் பள்ளி வழியாக புறவழிச்சாலையை சென்றடைகிறது. இதன் காரணமாக காலை, மாலை வேளைகளில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

அதேபோல் மேலவீதி, தெற்கு வீதி, கீழ வீதி, வண்டிகேட் உள்ளிட்ட பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் மேலவீதி, படித்துறை இறக்கம் உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.

அணிவகுக்கும் வாகனங்கள்

அதிலும் குறிப்பாக மதியம் மற்றும் இரவு நேரத்தில் போக்குவரத்து போலீசார் பெரும்பாலும் பணியில் இருக்காததால், அந்நேரத்தில் பாதி சாலையை அடைத்தபடி பலர் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை அடிக்கடி காண முடிகிறது. நான்கு வீதிகளிலும் நிலவும் போக்குவரத்து நெரிசலால் அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை செல்ல முடியாத சூழல் உள்ளது. சிதம்பரம் நகரில் மட்டுமின்றி சிதம்பரத்தில் இருந்து வல்லம்படுகை, காரைக்கால் செல்லும் பகுதியிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

நடவடிக்கை

எனவே போக்குவரத்து போலீசார் சிதம்பரத்தில் நான்கு முக்கிய வீதிகளிலும், சாலையோரங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து சிதம்பரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்த விவரம் வருமாறு:-

வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிதம்பரத்தை சேர்ந்த கார்த்தி கூறுகையில், சிதம்பரம் நகர பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது சிதம்பரம் நகர மக்களுக்கு வாடிக்கையாகி விட்டது. அதுவும் பண்டிகை நாட்களில் சிதம்பரம் மேலவீதி, தெற்கு வீதி, கீழ வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்வதே சவால் மிகுந்ததாக உள்ளது. இதனை சரிசெய்ய போதுமான அளவுக்கு போக்குவரத்து போலீசார் இல்லை. எனவே கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிக்னல் அமைக்க வேண்டும்

சிதம்பரம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடலூா் மாவட்டத்தில் மிக வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்று சிதம்பரம். இந்நகரின் மையப்பகுதியில் நடராஜர் கோவில் உள்ளது. இதனால் நகருக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிதம்பரம் வண்டிகேட் முதல் நான்கு முக்கிய வீதிகள், காந்தி சிலை பகுதிகளில் தாறுமாறாக செல்லும் வாகனங்களாலும், ஒரே சமயத்தில் ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story