வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காகவாகனங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றம்:போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா எதிரொலியாக வாகனங்களின் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
போக்குவரத்து வழித்தடம்
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பொதுமக்கள், பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே, வீரபாண்டி வழியாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வழித்தட மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, தேனியில் இருந்து சின்னமனூர் மார்க்கமாக கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் உப்புக்கோட்டை விலக்கு, கூழைனூர், குச்சனூர், சின்னமனூர் வழியாக செல்ல வேண்டும்.
தேனி வரும் வாகனங்கள்
சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேனி நோக்கி வரும் வாகனங்கள், உப்பார்பட்டி விலக்கு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் வழியாக தேனி வந்தடைய வேண்டும்.
திருவிழா முடிவடையும் வருகிற 16-ந்தேதி வரை இந்த வழித்தட மாற்றம் அமலில் இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் இந்த வழித்தட மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலாண்மை இயக்குனர் ஆய்வு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையங்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறும்போது, 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்காக வருகிற 16-ந்தேதி வரை மதுரை, திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், போடி, கூடலூர், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, சின்னமனூர், தேவாரம், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் இருந்து வீரபாண்டிக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். போக்குவரத்து தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் 9487599106, 9487599103 என்ற செல்போன் எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்' என்றார். அப்போது திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் சாலமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.