நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

நீர்மேலாண்மை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிவகாசியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி

நீர்மேலாண்மை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சிவகாசியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கிராமிய திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிராமிய திருவிழா நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அவரை பாட்டாளி மக்கள் கட்சியினர் குதிரை வண்டியில் பாரம்பரிய முறைப்படி அழைத்து வந்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் கிராமிய கலைகளை அழிவில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஆண்டு தோறும் தலா ரூ.1 லட்சம் ஒதுக்க வேண்டும். 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதை பா.ம.க. வரவேற்கிறது. அடுத்து வரும் காலங்களில் தமிழ்நாடு முழுவதும் சங்கமம் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைதளங்களுக்கு அடிமையாகி விட்டனர். அதில் இருந்து விடுபட வேண்டும். சிறுதானியங்களை சாப்பிடும் பழக்கங்களை கொண்டு வர வேண்டும். கிராம கலைகளை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் போதை பொருட்களை நாடமாட்டார்கள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளையாட்டு அரங்கம் கட்டிக்கொடுத்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

காமராஜர் பெயர்

திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று கவர்னர் தெரிவித்து இருக்கிறார். இது அவரது வேலை இல்லை. ஆன்லைன் சூதாட்ட மசோதா மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வரும் நிலையில், கடந்த 2 மாதங்களில் 10 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கவர்னருக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை.

விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ரூ.1 லட்சம் கோடி

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விருதுநகர் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். சிவகாசி வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். கடந்த ஆண்டு 500 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்தது. இதை தடுக்க வேண்டும். வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிச்சயம் வரும். அதை சமாளிக்க தேவையான நடவடிக்கையை அரசாங்கம் இப்போதே செய்ய தொடங்க வேண்டும். நீர்மேலாண்மை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் கோடியை ஒதுக்க வேண்டும். காடுகளின் அருகில் குவாரிகளை அமைக்க விதிக்கப்பட்ட தடைகள் திடீரென விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அரசாணையை ரத்து செய்து தடையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா, விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story