மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பம்


மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு  2½ லட்சம் பேர் விண்ணப்பம்
x

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு 2½ லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரிமைத்தொகை

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாக வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவேற்றம் செய்வதற்கும் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உள்பட்ட கார்டுதாரர்களுக்கு 586 இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பங்களை வினியோகம் செய்யும்போதே எப்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்பதற்கான டோக்கனையும் சேர்த்து வழங்கினர். எனவே டோக்கனில் குறிப்பிட்ட நாட்கள், நேரத்தின் அடிப்படையில் பொதுமக்கள், முகாமுக்கு சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

2½ லட்சம் விண்ணப்பம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வினியோகம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக நடக்கும் இந்த பணிகள் வருகிற 4-ந் தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு அடுத்த கட்ட பணிகள் 5-ந் தேதி தொடங்குகிறது.

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் 2 ஆயிரத்து 183 பேர், முகாம் பொறுப்பு அதிகாரிகள் 1,130 பேர், மண்டல அதிகாரிகள் 341 பேர், மேற்பார்வை அதிகாரிகள் 113 பேர், மாவட்ட அளவிலான 10 மேற்பார்வை அதிகாரிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 777 இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கருணாநிதி மகளிர் உரிமைத்திட்டத்துக்காக இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story