ரூ.32¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


ரூ.32¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

ரூ.32¾ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வியாபாரிகள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் வியாபாரிகளில் சிலர் இங்கிருந்து வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்வதும், பின்னர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும்போது தங்கத்தை கடத்தி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும், அதையும் மீறி கடத்தலில் ஈடுபடும் பயணிகளிடம் இருந்து திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து இரவு 11.55 மணிக்கு ஸ்கூட் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியாக அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அவரது உடைமையில் மறைத்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த 29,950 வெளிநாட்டு பணமான யூரோக்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சென்னையை சேர்ந்த சர்புதீன் என்பதும், அவர் வைத்திருந்த யூரோவின் இந்திய மதிப்பு ரூ.25 லட்சத்து 84 ஆயிரம் என்பதும் தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு பயணியிடம்...

இதேபோல் நேற்று காலை 9.05 மணிக்கு திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு செல்ல புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை, விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் இருந்து 6 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 2 ஆயிரம் சவுதி ரியால், 7,995 குவைத் திராம்ஸ் என வெளிநாட்டு பணங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.7 லட்சத்து 9 ஆயிரம் என்று தெரிகிறது.


Next Story