மையனூர் -தொண்டனந்தல் சாலையில் வனத்துறை அதிகாரி ஆய்வு
விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக மையனூர் -தொண்டனந்தல் சாலையில் வனத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.
ரிஷிவந்தியம்,
பகண்டை கூட்டுரோடு- மாமானந்தல் சாலை கடந்த ஆண்டு சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த சாலையில் மேலப்பழங்கூர் காப்புக்காடு இருந்ததால் மையனூர் -தொண்டனந்தல் இடையே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையை விரிவாக்க செய்ய வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வர பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மையனூர் -தொண்டனந்தல் சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மேலும் அந்த சாலையில் அதிக அளவில் வளைவுகள் உள்ளதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மையனூர்-தொண்டனந்தல் சாலையில் வளைவுகள் இல்லாத வகையில் சாலைவிரிவாக்கம் செய்ய வனத்துறை உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மையனூர் -தொண்டனந்தல் சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து விழுப்புரம் சரக வன அலுவலர் சுமேஷ்சோமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஆய்வாளர் கதிர்வேல், தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ், சாலை பணியாளர் நாகராஜ் மற்றும் வன அலுவலர்கள் உடன் இருந்தனர்.