பழனி மலையடிவார தோட்டங்களில் வனத்துறையினர் ஆய்வு
பழனி மலையடிவார ேதாட்டங்களில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு மா, தென்னை, கரும்பு உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. தோட்டத்துக்குள் காட்டுயானை, மான், பன்றி உள்பட வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை பரிந்துரைப்படி விவசாயிகள் சோலார் வேலி அமைத்துள்ளனர். இந்த சோலார் வேலியில் அதிக அழுத்த மின்சாரம் செலுத்தப்படுகிறதா? சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என பழனி வனச்சரகர் பழனிக்குமார் உத்தரவின்பேரில் வனப்பணியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், பாலசமுத்திரம், புளியம்பட்டி மலையடிவார தோட்ட பகுதிகளில் மின்வேலி குறித்து ஆய்வு செய்தனர். அப்போது சோலார் வேலியில் சரியான மின்னழுத்தம் செலுத்தப்படுகிறதா, மின்இணைப்பு ஏதும் கொடுக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் தோட்ட பகுதிகளில் தாழ்வாக மின்கம்பி சென்றால் மின்சாரத்துறை, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மின்வேலி அமைக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வு குறித்து வனச்சரகர் பழனிக்குமார் கூறும்போது, சட்டத்துக்கு புறம்பாக வேலியில் மின்இணைப்பு கொடுத்து வனவிலங்குகள் இறக்க நேரிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.