தின்பண்டங்களை காகித பையில் மாற்றி கொடுக்கும் வனத்துறையினர்
பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய புதிய ஏற்பாடாக, சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் தின்பண்டங்களை காகித பையில் வனத்துறையினர் மாற்றி கொடுக்கின்றனர்.
பொள்ளாச்சி
பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய புதிய ஏற்பாடாக, சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் தின்பண்டங்களை காகித பையில் வனத்துறையினர் மாற்றி கொடுக்கின்றனர்.
வாகன சோதனை
பொள்ளாச்சியில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் ஆழியாறு அணை, பட்டாம் பூச்சி பூங்கா, மூலிகை நாற்று பண்ணை, கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தொடர் விடுமுறை நாட்கள், பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.
இந்த நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்களை பாலித்தீன் பைகளில் எடுத்து வருகின்றனர். சிலர் மது பாட்டில்களை அத்துமீறி கொண்டு வருகின்றனர். இதனை ஆழியாறு பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்து, வனத்துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.
காகித பைகள்
சில நேரங்களில் வனத்துறையினரின் கண்காணிப்பையும் மீறி பாலித்தீன் பைகளை கொண்டு சென்று, தின்பண்டங்களை சாப்பிட்ட பிறகு அவற்றை வனப்பகுதியிலும், சாலையோரங்களிலும் வீசி செல்கின்றனர். இதை அறியாமல் தின்னும் வனவிலங்குகள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் தினமும் ரோந்து சென்று பாலித்தீன் பைகளை அவ்வப்போது சேகரித்து வருகின்றனர். இந்தநிலையில் பாலித்தீன் பைககளை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதை தடுக்க ஆழியாறு வனச்சோதனைச் சாவடியில் வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதுடன், அதில் உள்ள திண்பண்டங்களை காகித பையில் மாற்றி கொடுக்கின்றனர்.
வனப்பகுதிக்குள் செல்லாமல் தடுப்பு
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் வரும்போது தின்பண்டங்களை கொண்டு வருகின்றனர். பாலித்தீன் பைகளில் சுற்றப்பட்டுள்ள அந்த தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு வனப்பகுதிக்குள் வீசி செல்கின்றனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டாலும், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வனத்துறை சோதனை சாவடியில், பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை காகித பைக்கு மாற்றி வழங்குகிறோம். இதனால் பாலித்தீன் பைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.