நகராட்சி வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை
ராமநாதபுரத்தில் நகராட்சிக்கான வரிகளை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன் கூறியதாவது:-
ராமநாதபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை, கடைகளை பூட்டி சீல் வைத்தல், வரி செலுத்தாதவர்களின் பெயர்களை விளம்பரமாக வெளியிடுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தினமும் ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கப்படுகிறது. நகர்பகுதிகளில் வருவாய் உதவியாளர்கள், ஆய்வாளர்கள், பொறியியல் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் வரிவசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் 31-ந்தேதிக்குள் வரிகளை செலுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் நகராட்சி கணினி வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.