சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை
கள்ளக்குறிச்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.1 கோடியே 90 லட்சம், காலிமனை வரி ரூ.38.41 லட்சம், தொழில்வரி ரூ.20.63 லட்சம், குடிநீர் கட்டணம் ரூ.87.04 லட்சம், கடை வாடகை இனங்களில் ரூ.356.09 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடியே 6 லட்சம் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகைகள் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, வடிகால் வாய்க்கால் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதில் நிர்வாக இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி பகுதிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் தீவிர வரிவசூல் பணிகளை மேற்கொள்ள நகராட்சி பணியாளர்கள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுக்கள் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று வரிவசூல் பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே தங்கள் பகுதிகளுக்கு வரிவசூல் செய்ய வரும் நகராட்சி பணியாளர்களிடம் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகையை நிலுவையின்றி செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்த வேண்டியது சட்டபூர்வ கடமை ஆகும். எனவே நீண்ட காலம் சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள், தொழில்வரி மற்றும் கடை வாடகை தொகை நிலுவை வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் குத்தகைதாரர்களின் கடைகளை பூட்டி சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.