போலி பத்திரம் தயாரித்துதனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி;தொழில் அதிபர் கைது


போலி பத்திரம் தயாரித்துதனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி;தொழில் அதிபர் கைது
x

போலி பத்திரம் தயாரித்து தனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி செய்த தொழில் அதிபரை ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

போலி பத்திரம் தயாரித்து தனியார் வங்கியில் ரூ.88¼ லட்சம் கடன் பெற்று மோசடி செய்த தொழில் அதிபரை ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடன் கேட்டு விண்ணப்பம்

ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் தனியார் வங்கியின் வீட்டுக்கடன் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் நிர்வாக அதிகாரியான கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டம் கோபி டி.என்.பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (47). தொழில் அதிபரான இவர் கார்மெண்ட்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 6 ஆயிரம் சதுர அடி நிலத்தில் வீடு மற்றும் கார்மெண்ட்ஸ் கட்டியுள்ளார்.

நிலுவை

முகமது யூசுப் எங்களது வங்கி கிளையை அணுகி வீட்டை விரிவுப்படுத்திட கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்காக எங்கள் கிளை மேலாளர் விஸ்வநாதன், சட்ட மேலாளர் உமா சங்கர், தொழில்நுட்ப பொறியாளர் கணேஷ்குமார் ஆகியோர் அவரது வீட்டை ஆய்வு செய்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி ரூ.36 லட்சத்துக்கான கடன் தொகையை காசோலையாக வழங்கினோம். இதைத்தொடர்ந்து முகமது யூசுப் வீட்டையொட்டி உள்ள கார்மென்ட்ஸ் இடத்தின் பத்திரத்தை வைத்து கடன் கேட்டார்.

அந்த இடத்தையும் ஆய்வு செய்து ரூ.52 லட்சத்து 37 ஆயிரத்து 500 கடனும், அதைத்தொடர்ந்து காப்பீட்டிற்காக ரூ.2 லட்சத்து 37ஆயிரத்து 500-ம் வழங்கப்பட்டன. ரூ.88 லட்சத்து 37 ஆயிரத்து 500 கடன் பெற்ற முகமது யூசுப், கடன் தொகையை செலுத்தாமல் பல மாதங்களாக நிலுவை வைத்து வந்தார்.

கைது

இதைத்தொடர்ந்து அவர் அளித்த பத்திர ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானது என்பது தெரியவந்தது. எங்களை ஏமாற்றும் நோக்கத்தில் போலி பத்திரம் மற்றும் ஆவணங்கள் தயாரித்து கடன் பெற்று ஏமாற்றிய முகமது யூசுப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

அதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, முகமது யூசுப் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story