மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு குழு அமைப்பு
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது எனவும், கச்சத்தீவை மீட்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமேசுவரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
ராமேசுவரம்,
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டுக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது எனவும், கச்சத்தீவை மீட்க உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமேசுவரத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய மந்திரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம ரூபாலா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார்.
பின்னர் ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி புருஷோத்தம ரூபாலாவும், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் துறைமுக கடல் பகுதியில் மீன்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.
அதன்பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய துறைமுகம்
சாகர் பரிக்கிரமா யாத்திரையானது கடந்த 4 மாதத்திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி பல மாநிலங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை சந்தித்து வருகிறோம். தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு, திட்டங்களை ஆய்வு செய்தோம்.
ராமேசுவரத்தில் துறைமுக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இங்குள்ள மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் புதிய துறைமுகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தி வருவதால் அந்த ஆய்வு முடிந்த பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்படும்.
ஏர் ஆம்புலன்ஸ்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மத்திய வெளியுறவு துறை மூலம் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதி மீனவர்களை சந்தித்தபோது மீனவர்கள் வைத்த பிரதான கோரிக்கை என்னவென்றால், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அவர்களை மீட்டு காப்பாற்ற வசதியாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அரசிடம் பேசி ஏர் ஆம்புலன்ஸ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிக்கு செல்லும்போது, அந்த துறைமுகப் பகுதிக்குள் சென்று படகுகளை நிறுத்த வசதியாக குறிப்பாக ஒடிசா, குஜராத், மங்களூரு போன்ற கடல் பகுதிகளுக்கு சென்றால் அங்குள்ள துறைமுகத்தில் படகுகளை நிறுத்த வசதியாக தேசிய அடையாள அட்டை வேண்டுமென கேட்டுள்ளனர். இந்த கோரிக்கை குறித்தும் பரிசீலனை செய்யப்படும்.
ரூ.38,500 கோடி நிதி
பிரதமர் மோடி, மீன்வளத்துறைக்கு மட்டும் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததால் ஏராளமான பணிகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் மீனவர்களின் பங்கு உள்ளது.
நாட்டை காப்பவர்களாகவும், நாட்டின் எல்லையை காப்பவர்களாகவும் மீனவர்கள் இருந்து வருகின்றனர். மீனவர்கள் முன்னேற்றத்துக்காகவே மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்கியுள்ளது. அதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
இருநாட்டு குழு
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா- இலங்கை என இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா உள்ளிட்ட சூழ்நிலையால் இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று வெளியுறவுத் துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்பது அனைவருக்குமே தெரியும். கச்சத்தீவை மீட்பது குறித்து உரிய நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, பா.ஜனதா மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, தேவதாஸ், எமெரிட், சகாயம், நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் மீன்வளத்துறை மத்திய மந்திரியிடம் மீனவர்களின் கோரிக்கைகளை எடுத்து கூறினார்கள்.