தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்ததை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குடிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்

வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்ததை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குடிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சின்ன வெங்காயம்

இந்திய அரசு கடந்த 16-ந் தேதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு 40 சதவீத வரிவிதித்தது.

இது வெங்காயத்தை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மிகக் கடுமையான நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சின்ன வெங்காயம் தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் நாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து ஒவ்வொரு முறையும் தடைகளை விதித்தும், வரிகளை உயர்த்தியும் வருகிறது.

ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை உருவாக்க கோரிய கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சின்ன வெங்காயம் 1 கிலோவிற்கு உற்பத்தி செலவு குறைந்தபட்சம் 30 ரூபாயாக இருந்து வருகிறது. குறைந்தபட்ச லாபத்தோடு 1 கிலோ ரூ.45-க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். கட்டுப்படியான விலை கிடைத்து வந்த நிலையில், இந்திய அரசின் 40 சதவீதம் வரி விதிப்பு காரணமாக 1 கிலோவிற்கு 20 ரூபாய் குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிர் செய்து வந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் உற்பத்திக்கு எவ்வித மானியமும் அளிக்கப்படுவதில்லை. விலை நிர்ணயமும் கிடையாது. இந்த நிலையில் 40 சதவீத வரி விதிப்பை கண்டித்து குடிமங்கலத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வரி உயர்வை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story