முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை தற்கொலை
கோவையில் முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வடவள்ளி
கோவையில் முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வலுதூக்கும் வீராங்கனை
கோவை வடவள்ளி கல்வீராம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக். இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 52). இவர் முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை ஆவார். அசோக்-சாமுண்டீஸ்வரி தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சாமுண்டீஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக மனஅழுத்த நோய் இருந்து உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து உள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், அவர் குணமானார்.
விஷம் குடித்து தற்கொலை
இதையடுத்து குடும்பத்தினர் அவரை பத்திரமாக பார்த்துக்கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று, வீட்டில் தனியாக இருந்த சாமுண்டீஸ்வரி திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். வாயில் நுரை தள்ளியபடி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு பதக்கங்கள்
தற்கொலை செய்து கொண்ட சாமுண்டீஸ்வரி முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை ஆவார். தேசிய அளவிலான வலுதூக்கும்போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்று உள்ளார்.
குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு சர்வதேச மகளிர் வலுதூக்கும் போட்டியில் 3-வது இடமும், 1992, 1994-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய வலுதூக்கும் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு ஆசிய வலுதூக்கும் போட்டியில் முதலிடமும் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.