லஞ்ச ஒழிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் கலெக்டர் சாட்சியம்


லஞ்ச ஒழிப்பு வழக்கில்    விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் கலெக்டர் சாட்சியம்
x

லஞ்ச ஒழிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் முன்னாள் கலெக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம்


லஞ்ச ஒழிப்பு வழக்கு

கள்ளக்குறிச்சி ஆதிதிராவிட நல தனி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 8.2.2013 அன்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தாசில்தாராக பணியாற்றிய வந்த கபாரியாஸ் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.92,565-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

மேலும் இதுதொடர்பாக முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்ததில், ஆதிதிராவிட நல விடுதிகளில் மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பதற்காக அரசு ஒதுக்கிய நிதியில் இருந்தும் ஒவ்வொரு விடுதிக்கும் 10 சதவீத தொகையை பிடித்தம் செய்து அந்த பணத்தை தாசில்தார் கபாரியாஸ் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

முன்னாள் கலெக்டர் சாட்சியம்

அதன்பேரில் கபாரியாஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய அப்போதைய விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த சுப்பிரமணியன் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்ததால் அவர், இவ்வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் மாவட்ட முன்னாள் கலெக்டரும் தற்போது தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருபவருமான சுப்பிரமணியன் நேரில் ஆஜராகி இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். அவர் அளித்த சாட்சியங்களை நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி பதிவு செய்தார். தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story