முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 25-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 25-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அவர், வருகிற 25-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக புகார் எழுந்தது. அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் ஆஜராக உத்தரவு

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக கடந்த 8-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அம்மனுவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அம்மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீதான விசாரணை வருகிற 25-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் மனுதாரரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.


Next Story