முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக்கொலை
நெல்லை பேட்டையில் இரவில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பேட்டை:
நெல்லை பேட்டையில் இரவில் முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அ.தி.மு.க. பிரமுகர்
நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவா் மாடசாமி. இவருடைய மகன் பிச்சைராஜ் (வயது 52).
அ.தி.மு.க. பிரமுகரான அவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவராக இருந்தார். ேமலும் டாஸ்மாக் பாரும் நடத்தி வந்தார். கடந்த மாநகராட்சி தேர்தலில் 18-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சரமாரி வெட்டினர்
நேற்று இரவில் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். பேட்டை வீரபாகுநகர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பிச்சைராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர்.
பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிச்சைராஜ் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
சாவு
அந்த சமயத்தில் அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்ததும் உறவினர்களும் அங்கு குவிந்தனர்.
பிச்சைராஜை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிச்சைராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
காரணம் என்ன?
மேலும் சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்கள்.
ஆனால், கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா?, தொழில் போட்டியில் நடந்ததா?, கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த படுகொலை குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை பேட்டையில் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.