அமராவதி பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் ஆகஸ்டு மாதம் நீர் திறப்பு தாமதமாகும் என்ற அச்சம்
அமராவதி பிரதான கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் ஆகஸ்டு மாதம் நீர் திறப்பு தாமதமாகும் என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
வெள்ள நீர் போக்கிகள்
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் பகுதிகளின் புதிய ஆயக்கட்டு பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கால்வாயில் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. மேலும் மழை வெள்ள காலங்களில் கால்வாயிலிருந்து பாதுகாப்பான முறையில் நீரை வெளியேற்றும் வகையில் ஆங்காங்கே வெள்ள நீர் போக்கிகள் எனப்படும் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவையும் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன் மடத்துக்குளத்தை அடுத்த சாமராயப்பட்டி பகுதியில் வெள்ள நீர் போக்கியில் ஏற்பட்ட உடைப்பால் கால்வாய் பெருமளவு சேதமடைந்தது. இதனால் பெருமளவு பாசன நீர் வெளியேறி அருகிலுள்ள விளைநிலங்களில் தேங்கியதால் உடனடியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். கால்வாயில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதால் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி நிதி பெறப்பட்டு அதன் பிறகே பணி தொடங்கும் நிலை உள்ளது. எனவே வழக்கமாக ஆண்டுதோறும் பாசனத்துக்காக திறக்கப்படும் நீர் கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
புதிய ஆயக்கட்டு பகுதிகளில் பாசனத்துக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும், நிலத்தடி நீராதாரம் மேம்படுவதற்கும் கால்வாய் நீர் பெருமளவு உபயோகமாக இருக்கும். ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் தற்போது கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டால் புதிய பயிர் சாகுபடி பணிகளில் தடை ஏற்படுவதுடன் தென்னை, கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்கள் நீரின்றி காய்ந்து வீணாகும் நிலை ஏற்படும். எனவே துரித அடிப்படையில் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.