தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 7-வது நாளான நேற்று கையில் தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும். தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் அரசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் கடந்த 5-ந் தேதி அவினாசிபாளையம் சுங்கம் அருகே தொடங்கியது.
இந்த போராட்டம் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் நடக்கிறது. இந்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நடந்தது. இந்த போராட்டத்திற்கு வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முத்துராஜ், அழகுமலை பாசன சபை தலைவர் எஸ்.எல்.டி.சுப்பிரமணியம், தமிழ்நாடு பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கையில் தேங்காய் எண்ணெய் பாட்டில்
இந்த போராட்டத்தில் தேங்காய் எண்ணெய் பாட்டிலை விவசாயிகள் கையில் வைத்திருந்தனர். இந்த போராட்டத்தில் வெள்ளகோவில் பாசன சபை மற்றும் தொங்குட்டிபாளையம் கிராம விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.