மழைக்காலத்தில் அனைத்து குளங்களும் நிரம்ப நடவடிக்கை; கலெக்டர் விசாகன் உத்தரவு
மாவட்டத்தில் மழைக்காலத்தில் அனைத்து குளங்களும் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் மழைக்காலத்தில் அனைத்து குளங்களும் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், வேளாண்மை இணை இயக்குனர் விஜயராணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
* விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு ரூ.30 லட்சம் தொகை வழங்கப்படவில்லை. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நத்தம், கொடைக்கானல் பகுதிகளில் அரசு தரிசு நிலங்களில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
* சிறுமலை, கூக்கால் பகுதிகளில் கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதால் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, நீர்நிலைகளும் பாழாகுவதை தடுக்க வேண்டும்.
* ஆயக்குடியில் காட்டு யானைகள் தாக்கியதில் காயமடைந்த 6 பேருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் யானைகளின் அட்டகாசத்தால் மா, கொய்யா, மக்காச்சோளம் ஆகியவை அறுவடை செய்ய முடியாமல் வீணாகி வருகின்றன. அதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நத்தத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலை முறையாக மேற்கொண்டு உரிய ரசீது வழங்க வேண்டும். வேடசந்தூர், குஜிலியம்பாறை பகுதிகளில் குளங்கள் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லி, கொடுக்காபுளி உள்ளிட்ட கன்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
நீர்நிலைகள் சீரமைப்பு
இதற்கு பதில் அளித்து கலெக்டர் விசாகன் பேசுகையில், விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை இல்லாத பகுதிகளில் கிளை நிலையங்கள் அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு முன்பு முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதன்மூலம் மக்காத குப்பைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம்.
மேலும் ஓட்டல்கள், டீக்கடைகள், கடைகளில் அவற்றை பயன்படுத்துவது தெரியவந்தால் உடனடியாக புகார் செய்யலாம். மழைக்காலமாக இருப்பதால் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருதல், கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையினர் விரைவாக மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் அனைத்து குளங்களும் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தொழில் செய்வதற்கு முன்வரவேண்டும், என்றார்.
உரம் ஒதுக்கீடு
இணை பதிவாளர் காந்திநாதன் கூறுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. உரம் பற்றாக்குறை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தால் உடனடியாக அந்த சங்கத்துக்கு உரம் ஒதுக்கப்படும், என்றார்.