குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் பழங்கால விலங்கினத்தின் முட்டையா?


குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் பழங்கால விலங்கினத்தின் முட்டையா?
x

குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் பழங்கால விலங்கினத்தின் முட்டையா? என்பது பற்றி ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

கடலில் மூழ்கியிருந்த பகுதிகள்

பெரம்பலூர் மாவட்டம் கடந்த 30.9.1995 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் தனி மாவட்டமாக கடந்த 2000-ம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பூர் ஒன்றியம் ஓலைப்பாடி, ஆலத்தூர் ஒன்றியம் கொளக்காநத்தம், காரை, சாத்தனூர், கொட்டரை, ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளும், அரியலூரை சுற்றியுள்ள காட்டுபிரிங்கியம், பெரியநாகலூர், கிராமங்களிலும் எண்ணற்ற இயற்கை வளங்களும், புவியியல் கனிம வளங்களும் புதையுண்டு கிடக்கின்றன.

ஏனெனில் முந்தைய காலத்தில் தற்போதைய அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் கடலில் மூழ்கி இருந்தன. நாளடைவில் கடல் உள்வாங்கியதில், நிலப்பகுதி வெளிப்பட்டது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் சாத்திரப்படி கிரிடேசியஸ் காலத்தில் கடலில் புதையுண்ட பகுதியாக திகழ்ந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் கல்மர படிமங்களும், அரியலூர் பகுதியில் சுமார் 7 கோடி ஆண்டுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டைனோசர் போன்ற விலங்கினங்களின் முட்டை படிமங்களும் கண்டெடுக்கப்பட்டு, தற்போது அரியலூர் அரசு சிமெண்டு ஆலை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முட்டை போன்ற படிமங்கள்

தற்போதும் அரியலூரை சுற்றியுள்ள சில சுரங்கங்களில் கடல்வாழ் உயிரினங்களான நத்தை, நட்சத்திர மீன்கள், ஜெல்லி படிமங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் குன்னம் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள செங்கணான் குளத்தில் பாசில் படிமங்கள் கடந்த ஓரிரு ஆண்டுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செங்கணான் குளத்தில் கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் உரிய அனுமதி பெற்று மண் எடுத்து வருகின்றனர். கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த விலங்கின முட்டை படிமங்கள் போன்று ஒரே மாதிரியாக உருண்டை வடிவிலான படிமங்கள் தற்போதும் கிடைத்து வருகிறது. அந்த படிமங்களை உடைத்து பார்த்தால், நடுவில் முட்டைக்கரு போன்ற தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.

ஆய்வு செய்ய வேண்டும்

அந்த படிமங்களை கனிமவியல் மற்றும் சுரங்கத்துறையினர் எடுத்து வந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், ஆய்வின்போது அவை பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விலங்கினங்களின் முட்டை படிமம் என்பது தெரியவந்தால், அவற்றை பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அமோனைட் படிமங்கள் உள்பட சுமார் 300 கடல் வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அமோனைட் மையத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story