சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தை கைது
பள்ளிக்கு செல்லாததால் 7 வயது சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கு செல்லாததால் 7 வயது சிறுவனுக்கு சூடு வைத்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவரை பிரிந்தார்
கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராகிம் (வயது 33), வியாபாரி. இவருடைய மனைவி ஷர்மதா (29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஷர்மதா தனது கணவரை விட்டு பிரிந்தார்.
பின்னர் அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு முகமது முசாதிக் (33) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஷர்மதா தனது 2 மகன்கள் மற்றும் கணவருடன் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருகிறார்.
காலில் சூடு
ஆனாலும் சுல்தான் இப்ராகிம் அவ்வப்போது தனது மகன்களை பார்க்க செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் தனது மூத்த மகனான முகமது ஹபீப் (7) என்பவரை பார்க்க புல்லுக்காடுக்கு சென்றார். அப்போது அந்த சிறுவனின் வலதுகாலில் சூடு வைத்த அடையாளம் இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகனிடம் விசாரித்தார். அப்போது அவர், வளர்ப்பு தந்தையான முகமது முசாதிக், தோசை கரண்டியை அடுப்பில் சூடாக்கி தனது காலில் சூடு வைத்ததாக கூறினார்.
கைது
இது குறித்து சுல்தான் இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது ஹபீப் சரியாக பள்ளிக்கு செல்ல வில்லை என்பதால், காலில் சூடு வைத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முகமது முசாதிக்கை போலீசார் கைது செய்தனர்.