ரூ.581 கோடியே 44 லட்சத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


ரூ.581 கோடியே 44 லட்சத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

கரூர் மாவட்டத்தில் ரூ.581 கோடியே 44 லட்சத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கரூர்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கரூர் திருமாநிலையூர் மைதானத்தில் நேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி வெள்ளி வாளை பரிசாக வழங்கினார். விழாவில் கரூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திட்ட பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய திட்டப்பணிகள்

இங்கு நடைபெறும் இந்த விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.26 கோடியே 39 லட்சத்தில் 55 பணிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ரூ.2 கோடியில் 6 பணிகளும், பேரூராட்சிகள் துறை சார்பில் ரூ.9 கோடியே 3 லட்சத்தில் 9 பணிகளும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில் ரூ.387 கோடியில் 13 பணிகளும், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் ரூ.1 கோடியே 51 லட்சத்தில் 1 பணியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.51 கோடியே 20 லட்சத்தில் 8 பணிகளும், நீர்வளத்துறை சார்பில் ரூ.91 கோடியே 58 லட்சத்தில் 6 பணிகளும், உயர்கல்வித்துறை சார்பில் ரூ.12 கோடியே 46 லட்சத்தில் 1 பணியும் என மொத்தம் ரூ.581 கோடியே 44 லட்சத்தில் 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விரைவில் உறுதியாக நான் வந்து திறக்க போகிறேன். அந்த உறுதி்யை நான் முன்கூட்டியே வழங்க விரும்புகிறேன்.

சாலை பணிகளுக்கு அடிக்கல்

இதேபோல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சத்தில் 5 திட்டப்பணிகளும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 பணிகயும், நிலஅளவை பதிவேடுகள்துறை சார்பில் 3 திட்டப்பணிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 33 திட்டப்பணிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் 14 திட்டப்பணிகளும், பொதுப்பணித்துறை சார்பில் 9 திட்டப்பணிகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 திட்டப்பணிகளும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 6 பணிகளும், நபார்டு மற்றும் கிராமசாலைகள் சார்பில் 3 திட்டப்பணிகளும், நீர்வளத்துறை சார்பில் 19 திட்டப்பணிகளும் இன்றைக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.28 கோடியாகும்.ஏராளமான சாலைகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பள்ளிகள் மறுசீரமைப்பு

அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, உணவு தானிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சமையல்கூடங்கள், மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக சொல்வதானால் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு ஊருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களில் திட்டப்பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உற்சாக வரவேற்பு

கரூர் திருமாநிலையூரில் உள்ள மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருவதற்காக நேற்று காலை பயணியர் மாளிகையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அப்போது காளியப்பனூர், தாந்தோன்றிமலை, சுங்ககேட், திருமாநிலையூர் உள்ளிட்ட 23 இடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 More update

Next Story