மீன் வடிவில் நீரூற்று அமைப்பு


மீன் வடிவில் நீரூற்று அமைப்பு
x
தினத்தந்தி 10 Sept 2023 1:45 AM IST (Updated: 10 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மீன் வடிவில் நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது. டிராகன் உருவத்துடன் பார்வையாளர் மாடம் கட்டப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மீன் வடிவில் நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது. டிராகன் உருவத்துடன் பார்வையாளர் மாடம் கட்டப்பட்டு உள்ளது.

2-வது சீசன்

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் (முதலாவது சீசன்), செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. கோடை சீசனையொட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து 2-வது சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 125 ரகங்களை சேர்ந்த 4½ லட்சம் மலர் செடிகள் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் நடவு செய்யப்பட்டன. பிரெஞ்சு மேரிகோல்டு, சால்வியா, டையான்தஸ், பிகோனியா, ஜீனியா, டேலியா, செல்லோசியா, பெட்டுனியா, பிளாக்ஸ், கேலண்டுலா போன்ற வகை மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

பூத்து குலுங்கும் மலர்கள்

ஊட்டியில் மழை தொடர்ந்து பெய்ததாலும், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதாலும் மலர் செடிகளில் பூக்கள் பூக்க தாமதம் ஆனது. இந்தநிலையில் தற்போது 2-வது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.

பார்வையாளர் மாடம்

இந்த ஆண்டு 2-வது சீசனையொட்டி ஜப்பான் பூங்காவில், அந்நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரூ.5 லட்சத்தில் கேசிபோ எனப்படும் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் குழந்தைகளை கவரும் வகையில் டிராகன் உருவம் இடம்பெற்று உள்ளது.

இதேபோல் ரூ.2 லட்சம் செலவில் மீன் வடிவில் நீரூற்று கட்டப்பட்டு வருகிறது. அதில் உள்ள தொட்டியில் மீன்கள் விடப்பட உள்ளது. காலாண்டு விடுமுறை தொடங்கியதும் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்குள் பணிகள் முடிக்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story