பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை: மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்


பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை: மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலையில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலையில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

குடிநீர் குழாய் உடைப்பு

பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-திண்டுக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ரூ.3 ஆயிரத்து 649 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி-பல்லடம் ரோட்டில் புளியம்பட்டியில் மேம்பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. ஏற்கனவே சாலையின் இருபுறமும் கடந்த சில மாதங்களுக்கு முன் தூண் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராட்சத எந்திரங்கள் மூலம் கான்கிரீட் தூண்கள் வைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டது. இதற்கிடையில் பணியின் போது உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியும் நடந்தது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

மேம்பால பணிகள்

சாலை வசதிகளை மேம்படுத்த பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை ரூ.3 ஆயிரத்து 649 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-கமலாபுரம் இடையேயான 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,038 கோடியும், ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையேயான 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,268 கோடியும், மடத்துக்குளம்-பொள்ளாச்சி இடையேயான 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,343 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் 3 பிரிவுகளாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம்- கமலாபுரம் இடையே 17 பாலங்களும், ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே 19 பாலங்களும், மடத்துக்குளம்- பொள்ளாச்சி இடையே 21 பாலங்களும் கட்டப்படுகின்றன.

இதை தவிர ஒவ்வொரு சாலை சந்திப்புகளிலும் விபத்துக்களை தடுக்க சிறிய அளவிலான பாலம் அமைக்கப்படுகிறது. முக்கிய நகர பகுதிகளை நான்கு வழிச்சாலையுடன் இணைக்க 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி-மடத்துக்குளம் இடையே 50 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன. பல்லடம் ரோட்டில் மேம்பாலம்அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. எனவே வாகனங்கள் மாற்றுப்பாதையில் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story