ஆசிரியையிடம் ரூ.1 லட்சம் மோசடி


ஆசிரியையிடம் ரூ.1 லட்சம் மோசடி
x

ராமநாதபுரத்தில் ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த ஆசிரியையிடம் சேலை கிழிந்திருந்ததால் திருப்பி அனுப்ப முயன்ற போது நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த ஆசிரியையிடம் சேலை கிழிந்திருந்ததால் திருப்பி அனுப்ப முயன்ற போது நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசிரியை

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரின் மனைவி தேவி (வயது35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து தற்போது அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவர் கடந்த 19-ந் தேதி இணையதளத்தில் பார்த்து கொண்டிருந்தபோது சேலை ஒன்று ரூ.799 என்ற விலையில் விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தினை பார்த்துள்ளார்.

அந்த சேலை தேவிக்கு பிடித்திருந்ததால் அதனை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் வசதியின் மூலம் ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அவருக்கு கடந்த 25-ந் தேதி அவர் ஆர்டர் செய்து சேலை கொரியர் மூலம் வந்து சேர்ந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த தேவி சேலை கிழிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விவரம்

இதனால் அதனை திருப்பி அனுப்பிவிடும் எண்ணத்தில் இணையதளத்தில் சென்று அதற்கான முகவரியை பார்த்துள்ளார். அதில் கிடைத்த எண்ணை எடுத்து தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்துள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர் எனிடெஸ்க் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் சேலை விவரங்கள், வங்கி கணக்கு எண் முதலியவற்றை பதிவு செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை பதிவு செய்தபோது அதில் ரகசிய எண் வந்துள்ளது. அந்த எண்ணை தெரிவித்தால்தான் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன்படி தேவி ரகசிய எண்ணை அதன் விபரீதம் தெரியாமல் பகிர்ந்துள்ளார். ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட மர்ம நபர் சில நிமிடங்களில் உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று கூறி இணைப்பை துண்டித்து உள்ளார்.

அதிர்ச்சி

சில நிமிடங்களில் அவரின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. அதற்கு மாறாக அவரின் வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளில் மொத்தமாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரதது 500 பணத்தினை எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story