ஒட்டன்சத்திரம் அருகே வங்கி அதிகாரி எனக்கூறி விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் அபேஸ்


ஒட்டன்சத்திரம் அருகே வங்கி அதிகாரி எனக்கூறி விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் அபேஸ்
x

வங்கி அதிகாரி எனக்கூறி விவசாயியிடம் அபேஸ் செய்த ரூ.14 ஆயிரம் மீட்கப்பட்டது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகரையை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 69). விவசாயி. இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தன்னை வங்கி மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் சுந்தரவடிவேலிடம் வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று விவரங்களை கேட்டுள்ளார்.

அதை உண்மை என நம்பிய சுந்தரவடிவேல் தனது வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை தெரிவித்துள்ளார். பின்னர் அவருடைய செல்போனுக்கு வந்த கடவுசொல்லையும் கூறியிருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.14 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னரே மர்ம நபர் தன்னை மோசடி செய்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் சுந்தரவடிவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் வடமாநிலத்தை சேர்ந்த நபர், ரூ.14 ஆயிரத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை மீட்டு சுந்தரவடிவேலிடம் போலீசார் ஒப்படைத்தனர்.



Next Story