மின் இணைப்பு எண்ணுக்கு புதிய அட்டை வழங்குவதாக மோசடி; 4 பெண்கள் சிக்கினர்


மின் இணைப்பு எண்ணுக்கு புதிய அட்டை வழங்குவதாக மோசடி; 4 பெண்கள் சிக்கினர்
x

கோபால்பட்டி அருகே மின் இணைப்பு எண்ணுக்கு புதிய அட்டை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பெண்கள் சிக்கினர்.

திண்டுக்கல்

கோபால்பட்டி அருகே மின் இணைப்பு எண்ணுக்கு புதிய அட்டை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 4 பெண்கள் சிக்கினர்.

வீடு, வீடாக வசூல்

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள தி.பாறைப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று தி.பாறைபட்டிக்கு அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத 4 பெண்கள் வந்தனர்.

அப்போது அவர்கள் வீடு, வீடாக சென்று மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், மின் இணைப்பு எண்ணுக்கு புதிய அட்டை வழங்குவதாகவும் கூறியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.50 வீதம் வசூல் செய்தனர்.

பின்னர் சிறிய அட்டையில், சம்பந்தப்பட்ட வீடுகளின் மின் இணைப்பு எண்ணை புதிதாக எழுதி கொடுத்து, இதனை மின்மீட்டரின் அருகே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். சுமார் 50 வீடுகளில் அந்த பெண்கள் இதுபோன்று மின்இணைப்பு அட்ைட வழங்குவதாக கூறி ரூ.50 வசூலித்துள்ளனர்.

4 பெண்கள் சிக்கினர்

இதற்கிடையே அந்த பெண்கள் மீது கிராம மக்கள் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள், மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டனர்.

அப்போது மின்வாரிய அலுவலகத்தினர், இதுபோன்று நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று கூறினர். இதையடுத்து அந்த 4 பெண்களையும் பிடித்து கிராம மக்கள் விசாரித்தனர். அப்போது அவர்கள் பணத்திற்கு ஆசைபட்டு இப்படி மோசடியில் ஈடுபட்டதாக கூறினர்.

இதனையடுத்து பாறைப்பட்டி ஊர் பொதுமக்கள், அந்த 4 பெண்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தற்போது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில் கிராமப்புறங்களில் இதுபோன்று மோசடி சம்பவங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மோசடி நபர்களை போலீசார் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story