வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
வாலிபரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
காளையார்கோவிலை அடுத்த மந்தி கண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது 29). எலக்ட்ரீசியன். கடந்த 6-ந் தேதி இவரது முகநூல் பக்கத்தில் கார் விளம்பரம் ஒன்று வந்தது. அந்த காரை வாங்க விரும்பிய செந்தில் அதிலிருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசியவர் தான் ராணுவ கேண்டினில் காரை வாங்கியதாகவும், அதன் விலை ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் என்றும் கூறினார். செந்தில் அவரிடம் அந்த காரை ரூ.ஒரு லட்சத்து 28,000-க்கு விலை பேசி, அந்த நபர் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர் பேசியபடி காரை கொடுக்காமல் மேலும் ரூ.5000 கேட்டதாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த செந்தில், அந்த நபரிடம் தீவிரமாக விசாரித்தபோது இணைப்பை துண்டித்துவிட்டார். பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.