அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.17 லட்சம் மோசடி; ஊர்க்காவல் படைவீரர் கைது
திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த ஊர்க்காவல் படை வீரரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த ஊர்க்காவல் படை வீரரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஊர்க்காவல் படை வீரர்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கோணப்பட்டியை சேர்ந்தவர் சங்கப்பன் (வயது 27). பட்டதாரி. இவர் அரசு வேலையில் சேருவதற்காக அரசு போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பஸ் நிலையத்தின் அருகே உள்ள ஒரு மையத்தில், கணினி பயிற்சி பெற்றார். அப்போது நண்பர் ஒருவர் மூலம் வேடசந்தூரை அடுத்த மல்வார்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (38) என்பவர், சங்கப்பனுக்கு அறிமுகம் ஆனார். விஜயகுமார், திண்டுக்கல்லில் ஊர்க்காவல் படை வீரராக இருக்கிறார். சங்கப்பன் அரசு வேலையில் சேர முயற்சி செய்வதை அறிந்த விஜயகுமார், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
மோசடி-கைது
இதனை உண்மை என நம்பிய சங்கப்பன் ரூ.1 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. இதேபோல் சங்கப்பனின் நண்பர்களான சகாயஅந்தோணிராஜாவிடம் ரூ.3 லட்சமும், ஆண்டவரிடம் ரூ.7 லட்சமும், காவேரியிடம் ரூ.6 லட்சமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விஜயகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் ஆண்டவருக்கு சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி ஆணை தயாரித்து கொடுத்துள்ளார்.
அதன்பின்னரே 4 பேரும் தங்களை விஜயகுமார் மோசடி செய்ததை தெரிந்து கொண்டனர். இதையடுத்து பணத்தை திரும்ப கேட்ட போது கொடுக்காததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 4 பேரும் புகார் அளித்தனர். அந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஊர்க்காவல் படைவீரர் விஜயகுமாரை கைது செய்தனர்.