3 பேரை திருமணம் செய்து மோசடி; ஆந்திர பெண் கைது


3 பேரை திருமணம் செய்து மோசடி; ஆந்திர பெண் கைது
x
தினத்தந்தி 2 July 2022 8:01 PM GMT (Updated: 3 July 2022 12:45 AM GMT)

சென்னை ஐ.டி.ஊழியரை 3-வதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை ஐ.டி.ஊழியரை 3-வதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

ஐ.டி.ஊழியர்

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை குமரா நகர், ராஜீவ் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 65). இவரது மகன் ஹரி (44). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் சென்னை தரமணியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து, பெண் குழந்தை பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து ஹரி 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக வரன் தேடி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வரக்கூடிய நபர் மூலம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை பார்த்துள்ளனர். அவர் தனக்கு 35 வயது என்று கூறியதோடு, தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை தனியாக வசித்து வருவதாக கூறியுள்ளார்.

சொத்துக்காக மிரட்டல்

அதன் பின்னர் சரண்யாவுக்கும் ஹரிக்கும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 25-10-2021 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் இருவரும் இல்லற வாழ்வை தொடங்கிய நிலையில், ஹரியின் சொத்து விவரங்களை கேட்டு சரண்யா தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் ஹரியையும் அவரது தாயாரையும் மிரட்டி சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவர்கள் உடன்படாததால், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக திருப்பதி போலீஸ் நிலையத்தில் ஹரி மற்றும் அவரது தாயார் மீது சரண்யா புகார் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து ஹரியின் தாயார் இந்திராணி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து சரண்யாவை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்.

மோசடி பெண் கைது

அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அவரது உண்மையான பெயர் சுகுணா என்றும் போலியாக சரண்யா (35) என்று கூறியிருப்பதும், தெரியவந்தது. அத்துடன் 50 வயதான சுகுணாவுக்கு ஏற்கனவே திருப்பதியை சேர்ந்த ரவி என்பவருடன் திருமணம் நடந்து 2 பெண் பிள்ளைகள் இருப்பதும், பணத்திற்காக ஹரியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைடுத்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் சுகுணாவை கைது செய்து, பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதையடுத்து நேற்று மதியம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (52) என்பவர் சுகுணாவை கடந்த 2011-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். மேலும் ரவி, சுப்பிரமணி, ஹரியை போன்று பலரை சுகுணா ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.


Next Story