போலி பணிநியமன ஆணை வழங்கிய விவகாரம்:மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான பட்டதாரிக்கு போலீஸ் வலைவீச்சுபாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை
போலி பணி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான பட்டதாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன் மகன் அந்தோணி சேவியர் (வயது 30). இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதே கல்லூரியில் கள்ளக்குறிச்சி அருகே பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த தெய்வீகன் மகன் எழிலரசன் (வயது 25) என்பவர் படித்தார். பி.காம் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்தோணி சேவியரை சந்தித்தார்.
அப்போது எழிலரசன் தான் தி.மு.க.வில் உள்ளதாகவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் கணினி ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், அலுவலக இளநிலை உதவியாளர், மனித வள அலுவலர் உள்பட பல்வேறு பணிகளுக்கு 64 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். எனக்கு தி.மு.க.வில் செல்வாக்கு உள்ளது, இதை பயன்படுத்தி, அந்த வேலையை என்னால் சுலபமாக வாங்கித்தர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
போலியான பணி ஆணை
மேலும் வேலை வேண்டும் ஒன்றால் ஒரு நபருக்கு ரூ. 2 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்ததுடன், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் என்று அந்தோணி சேவியரிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்தோணி சேவியர், தனக்கு வேலை வாங்கி தர வேண்டுமென ரூ.2 லட்சம் பணத்தை எழிலரசனிடம் கொடுத்தார். இதையடுத்து, பணி ஆணை ஒன்றை எழிலரசன் அந்தோணி சேவியரிடம் கொடுத்தார். இதை நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது தான் அது போலியான பணி ஆணை என்பது அந்தோணி சேவியருக்கு தெரியவந்தது.
மேலும் 22 பேரிடம் மோசடி
இதனிடையே அந்தோணி சேவியரை போன்று அழகாபுரத்தை சேர்ந்த ஜோபின்சின்னப்பன், ஜேம்ஸ் செல்வராஜ் உள்பட 22 பேர் பேரிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.44 லட்சத்தை எழிலரசனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதன் பிறகு அவர் கொடுத்த பணி நியமன ஆணையை பெற்று, மருத்துவமனைக்கு சென்ற போது தான் இவர்களுக்கு அது போலியான ஆணை என்பதும், தன்னிடம் பணத்தை பெற்று அவர் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தார்கள். அப்போது போலீசார், மோசடி தொகை அதிகமாக இருப்பதால், இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கமாறு தெரிவித்தனர்.
போலீஸ் வலைவீச்சு
அதன்பேரில், பாதிக்கப்பட்டவர்கள் அந்தோணி சேவியர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதன்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாகியுள்ள எழிலரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.