மாநகராட்சி நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு விற்று மோசடி
கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு ஐ.டி. ஊழியருக்கு விற்று மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு ஐ.டி. ஊழியருக்கு விற்று மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஐ.டி. ஊழியர்
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் மனோபாலன். இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் சொந்த நிலம் வாங்க முடிவு செய்தார். இதற்காக பலரிடம் கூறி இருந்தார்.
இந்த நிலையில் கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், அவருயை மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களின் உறவினரும் நில புரோக்கரான பன்னீர் செல்வம் ஆகியோர் மனோபாலனுக்கு அறிமுகம் ஆனார்கள். பின்னர் அவர்கள் பல இடத்தில் நிலம் இருக்கிறது என்று இடத்தை காட்டி உள்ளனர்.
ரூ.44 லட்த்துக்கு விற்பனை
பின்னர் குனியமுத்தூர் அருகே 8 சென்ட் நிலம் இருப்பதாக கூறி அதை காட்டி உள்ளனர். அந்த நிலம் மனோபாலனுக்கு பிடித்துவிட்டதால் அதை வாங்க முடிவு செய்தார். அப்போது அந்த நிலம் ரூ.44 லட்சம்தான் என்று கூறி உள்ளனர்.
உடனே அவரும் கடந்த 2021-ம் ஆண்டில் பணம் கொடுத்து அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து உள்ளார். பின்னர் மனோபாலன் தான் வாங்கிய அந்த நிலம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அது மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலம் என்பது தெரியவந்தது. மேலும் பிரபாகரன் உள்பட 3 பேரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா நிலத்தை மனோபாலனுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மனோபாலன் கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் பிரபாகரன், அவருடைய மனைவி புவனேஸ்வரி, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.