வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை அனுப்பி மோசடி - போலி முகவர் கைது


வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை அனுப்பி மோசடி - போலி முகவர் கைது
x

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை அனுப்பி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி முகவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ஜோஸ்பின் ராயன். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 'சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் போலியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், திருவேற்காடு ஸ்ரீதேவி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது என்று அப்பாவி இளைஞர்களிடம் மூளைச்சலவை செய்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சுற்றுலா விசா பற்றி என்று கேள்வி கேட்ட இளைஞர்களிடம் வெளிநாட்டுக்கு சென்றவுடன் வேலை அனுமதி விசா வாங்கி தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலி முகவர் ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 பேரின் பாஸ்போர்ட்டுகள், 100 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டத்துக்கு புறம்பானது. வெளிநாட்டு வேலைக்கு புறப்படுவதற்கு முன்பாக குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சந்தேகங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

தரகர்கள் கடைசி நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து தரும் விசாக்களை நம்பி வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடாது. பதிவு பெறாத முகவர்கள் வழங்கும் விமான டிக்கெட், விசா ஆகியவைகள் அனைத்தும் 'ஆன்லைன்' மூலம் பெறப்படுபவை. கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்துவிட்டு அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விடுவார்கள். எனவே விமான டிக்கெட், விசா ஆகியவைகள் உண்மைதானா? என்பதை ஆராயாமல் பணம், பாஸ்போர்ட்டையோ கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story