நாகர்கோவிலில் உறவினரிடம் ரூ.70 லட்சம் கடன் வாங்கி மோசடி 4 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் உறவினரிடம் ரூ.70 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பரநகர் சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரிடம், உறவினர்களான புத்தேரி பகுதியைச் சேர்ந்த சிவகார்த்திக், அவருடைய தாயார் அம்பிகா, சகோதரி விஜி என்ற ராஜேஸ்வரி மற்றும் சுடலைமுத்து என்ற முத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவகார்த்திக் புதிய தொழில் தொடங்க கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதன்பேரில் பாரதி முதலில் ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்தையும், தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.50 லட்சமுமாக மொத்தம் ரூ.69 லட்சத்து 97 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட 4 பேரும் திரும்பக் கொடுக்காமல் காசோலைகளை மட்டும் கொடுத்து மோசடி செய்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதி 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலஸ் ஸ்டீபன் ஆகியோர் சிவகார்த்திக் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.