தொழில் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40½ லட்சம் எடுத்து மோசடி
தொழில் அதிபரின் சிம்கார்டை முடக்கி ரூ.40½ லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை
தொழில் அதிபரின் சிம்கார்டை முடக்கி ரூ.40½ லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழில் அதிபர்
கோவை மரக்கடை அருகே உள்ள எஸ்.பி.என். லே அவுட்டை சேர்ந்தவர் முகமதுகான் (வயது 55). இவர் மரக்கடை, செட்டிபாளையம் பகுதியில் அச்சக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். முகமது கான் தனது செல்போனில் 2 சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு சிம்கார்டு திடீரென செயல் இழந்தது. பின்னர் இந்த சிம்கார்டு ஒருநாளுக்கு பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. அதற்கு பின்னர் முகமது கான் தனது வங்கி கணக்கு விவரங்களை செல்போனில் ஆய்வு செய்தார். அப்போது ரூ.40 லட்சத்து 48 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டு இருந்ததாக கணக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
போலி இ-மெயில் தயாரிப்பு
இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்தபோது, பணத்தை 27 பரிவர்த்தனைகள் மூலமாக, செல்போன் எண்ணை முடக்கி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து முகமது கான், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தமோசடி நடைபெற்றது குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
முதலில் முகமதுகானின் இ-மெயில் போல் போலி இ-மெயில் தயாரித்து, செல்போன் நிறுவனத்துக்கு அனுப்பி சிம்கார்டை முடக்கி உள்ளனர். பின்னர் அதே நெம்பர் சிம்கார்டு பெற்று ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு வங்கி கணக்கிற்கு ரூ.40½ லட்சத்தை அனுப்பி மோசடி செய்துள்ளனர். இந்த கும்பல் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை ஒவ்வொருவரும் ரகசியமாக பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு மோசடி
சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சத்தியநாதன் (32) என்பவர் தனது செல்போனில் வாட்ஸ் அப்பில் வந்த ஒரு குறுஞ்செய்தியை பார்த்தார். அதில் இ பே மூலமாக வணிக வர்த்தகம் செய்தால் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அவர் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்தை 'டாஸ்க்' என்ற வகையில் முதலீடு செய்தார். பின்னர் இதில் மோசடி நடந்திருப்பதும், தனது பணம் திரும்ப கிடைக்கவில்லை எனவும் அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.