நிதி நிறுவன அதிபர் மீது மேலும் ரூ.31 லட்சம் மோசடி புகார்


நிதி நிறுவன அதிபர் மீது மேலும் ரூ.31 லட்சம் மோசடி புகார்
x

சேலத்தில் பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணி மீது மேலும் ரூ.31 லட்சம் மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

சேலம்

பண மோசடி

சேலம் அழகாபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கட்டினால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு பணம் தருவதாக கவர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய்க்கு முதலீடு செய்தனர். ஆனால் குறிப்பிட்ட தேதி முடிவடைந்தும் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, நிதி நிறுவனம் நடத்தி ரூ.37 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அதன் உரிமையாளர் பாலசுப்பிரமணி மீது காடையாம்பட்டியை சேர்ந்த காவேரியப்பன் என்பவர் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார்.

நிதி நிறுவன அதிபர் கைது

அதன்பேரில், பண மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணி, அவருடைய மனைவி தனலட்சுமி, மகன் வினோத் மற்றும் பணியாளர் கதிர்வேல் ஆகிய 4 பேர் மீது அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு நேற்று முன்தினம் சென்னையில் இருந்த அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

மேலும் 2 வழக்கு

இந்த நிலையில், கைதான நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணி மீது மேலும் 2 பேர் பண மோசடி புகார் கொடுத்துள்ளனர். திருச்சி சத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் (40) என்பவரிடம் ரூ.5 லட்சம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் பாலசுப்பிரமணி மீது மேலும் 2 வழக்குப்பதிவு செய்து ரூ.31 லட்சம் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story