வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி


வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:44+05:30)

கோவையில் இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவையில் இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரசு துறையில் வேலை

கோவை கோவில்பாளையம் அருகே கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 52). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு ஜி.சரவணகுமார், ஜவகர் பிரசாத், என்.எஸ்.சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர் அறிமுகமானார்கள்.

அவர்கள் என்னிடம் இந்து சமய அறநிலையத்துறை உள்பட பல்வேறு அரசு துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கிறது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறினார்கள்.

போலி பணி நியமன ஆணை

அதை உண்மை என நம்பிய நான் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

இதைத் தொடர்ந்து அவர்கள் என்னிடம் பணி நியமன ஆணை கொடுத்தார்கள். ஆனால் அதை சரி பார்த்த போது அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

இதுபோன்று அவர்கள், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்து உள்ளனர்.

மேலும் வேலை வாங்கி கொடுக்காமல் போலி நியமன ஆணை வழங்கி வருகின்ற னர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

4 பேர் மீது வழக்கு

அந்த புகாரின் பேரில் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக ஜி.சரவணகுமார், ஜவகர் பிரசாத், என்.எஸ்.சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். பணமும் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனர்.


Next Story