பெண்ணிடம் நூதன நகை மோசடி; வடமாநில வாலிபர் கைது
பேரையூர் அருகே பெண்ணிடம் நகை பாலிஸ் செய்வதாக கூறி நகை மோசடி செய்த வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
நகை பாலிஸ் செய்வதாக கூறி
திருமங்கலம் தாலுகா எம்.பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி ரூபிணி (வயது 20). இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்தபோது, வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், அங்கு வந்து அரைகுறை தமிழில் தான் பழைய தங்க நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக கூறியுள்ளார். உடனே ரூபிணியும் தனது கழுத்தில் இருந்த 5½ பவுன் எடையுள்ள தங்க நகையை கழற்றி வாலிபரிடம் கொடுத்துள்ளார்.
வடமாநில வாலிபரும் ஏதோ ஒரு ரசாயனத்தில் தங்க சங்கிலியை முக்கி உள்ளார்.அப்போது தங்கச்சங்கிலி, பழைய சங்கிலி போன்று மாறியது. உடனே ரூபிணி அவரிடம் என்ன இப்படி எனது நகை பழையது போன்று மாறிவிட்டது என்று கேட்டுள்ளார். உடனே வட மாநில வாலிபர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ரூபிணி சத்தம் போட்டவுடன் அங்கிருந்து அவரது கணவர் கருப்பையா மற்றும் கிராமத்தினர் ஒன்று திரண்டு வட மாநில வாலிபரை பிடித்துள்ளனர்.
வாலிபர் கைது
உடனே கருப்பையா தங்க செயினை எடுத்துக்கொண்டு அங்குள்ள கூட்டுறவுக்கு சென்று நகையை எடை போட்டு பார்த்தபோது, 4½ பவுன் தான் இருந்தது. பின்னர் வடமாநில வாலிபரை பிடித்து நாகையாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து ரூபிணி நாகையாபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பீகார் மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.