வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பிரமுகர் மகனுடன் கைது
வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாட்டில் வேலை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 63). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மகன் கருப்பையா (26). இவர்கள் 2 பேரும் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பரவாய் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் ராஜாராம் (31) என்பவருக்கு குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் 160 தினார் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40 ஆயிரம்) சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும், மேலும் விசா எடுப்பதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவாகும் என்று கருணாநிதி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோர் கூறி உள்ளனர்.
அறையில் தங்க வைப்பு
இதையடுத்து, ராஜாராம் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 13-ந் தேதி ராஜாராம் உள்பட 12 பேர் குவைத் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில், 5 பேருக்கு மட்டும் வேலை வாங்கி கொடுத்துள்ளனர். மீதமுள்ள 7 பேருக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஒரு அறையில் தங்க வைத்து உள்ளனர். மேலும் சம்பளம் 160 தினார் என்பதற்கு பதிலாக 90 தினார் (ரூ.24 ஆயிரம்) என்றும் கூறியுள்ளனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ராஜாராம் உள்ளிட்ட 12 பேரும் அங்குள்ள தமிழ் சங்கம் மற்றும் இந்திய தூதரகம் உதவியுடன் கடந்த மாதம் 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினர்.
சிறையில் அடைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக ராஜாராம் உள்ளிட்ட 12 பேரும் நேற்று பரவாய் கிராமத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்று கேட்டனர். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜாராம் உள்ளிட்டோர் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குன்னம் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, குன்னம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் கருணாநிதி மற்றும் அவரது மகன் கருப்பையா ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.